சங்கரன்கோவில் அருகே புகார் குறித்து விசாரிக்க சென்ற காவலர் மீது சாக்கடை கழிவுகளை எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளதிகுலம் பகுதி கிராமத்தில் அசோகன் என்பவர் குடிபோதையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவிட்டார். இதனை அடுத்து சின்ன கோவிலாங்குளம் காவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரித்துக்கொண்டிருந்த அவர் மீது மாட்டுச் சாணத்தைக் கொண்டு சமந்தப்பட்ட இளைஞர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவர் குடிபோதையில் இருந்தார் என்று அப்பகுதி மக்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.







