நடிகர் விஜய் நடிக்கும் 67-வது படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ், தமிழ் நடிகர் அர்ஜுன் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு சர்க்கார், பைரவா போன்ற படங்களில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அதேபோல் திரிஷாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
– இரா.நம்பிராஜன்








