இரட்டை கோபுரம் எப்படி தகர்க்கப்பட்டது மற்றும் இரட்டை கோபுரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 தளங்களும் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த கட்டுமானமானது சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பானது எனப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இந்த அடுக்குமாடி கட்டிடமானது கட்டுமான விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடந்தாண்டு கட்டிடங்களை வெடி வைத்துத் தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்துத் தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்பட்டது.
இரட்டை கோபுரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள்:
இரட்டை கோபுரங்களைத் தகர்க்க 3,700 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அதேசமயம் அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையிலும், அருகிலுள்ள கட்டிடங்கள் சேதமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு காரணமாக இரட்டை கோபுரங்களைச் சுற்றி இருந்த 5,000-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு முன்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்குச் சொந்தமான சுமார் 2,700 வாகனங்களும் வளாகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன, அத்துடன் அங்கு வசித்தவர்கள் 150 முதல் 200 வரையிலான தங்கள் செல்லப்பிராணிகளை உடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
இரட்டை கோபுரம் தகர்ப்பில், ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவிற்கு அந்த பணி அவ்வளவு எளிமையான பணியாக பணியாக இல்லை. மாறாக மிகவும் சவாலான பணியாகவே அமைந்தது. இதற்காக 3,700 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் 9,400 துளைகள் ஏற்படுத்தப்பட்டு வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பின் தாக்கத்தைக் குறைக்க.இரட்டைக் கோபுரங்களுக்கு மிக அருகாமையில் உள்ள Aster 2 மற்றும் Aster 3 ஆகிய இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகில் ஸ்டீல் தகடுகள் மற்றும் 1,400 டிரக் டயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அண்மைச் செய்தி: ‘ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?’
இடிப்பு செயல்முறை 9 வினாடிகளுக்குள் இருந்தாலும், வெடிப்பு காரணமாக உருவாகும் ஒலி அளவு 150-200 டெசிபல்களை ஒட்டி இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது இரட்டைக் கோபுரத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில் ஆறு பேர் கொண்ட குழு, இறுதி பொத்தானை அழுத்தியுள்ளனர். இந்த இடிப்பு நடவடிக்கையில், 80,000 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டன. அதில் 50,000 மெட்ரிக் டன்களை அதே இடத்திலேயே சுத்திகரிக்கவும், மீதமுள்ள 30,000 மெட்ரிக் டன் குப்பைகளை நொய்டா ஆணையத்தின் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு ஆலையில் அறிவியல் முறையில் செயலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து குப்பைகளையும் அகற்றக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் எனச் சொல்லப்படுகிறது.