சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையிலிருந்த 47 பச்சிளம் குழந்தைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு அருகே மருத்துவர்களுக்கான அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை அதிகாரிகள், தீ விபத்து சம்பவத்தில் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த 47 குழந்தைகளில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இவர்களில் 17 குழந்தைகள் தாயின் கண்காணிப்பிலும் மீதமுள்ள 36 குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பிலும் இருந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக மருத்துவ கண்காணிப்பிலிருந்த குழந்தைகளின் நிலை குறித்து தெரியாமல் பெற்றோர் அச்சமடைந்தனர். பின்னர் 36 குழந்தைகளின் தாய்மார்களை அழைத்து மருத்துவர்கள் கண்காணிப்பிலிருந்த 36 குழந்தைகளைக் காண்பிக்கப்பட்டுள்ளது.
மின்கசிவுக்குப் பிறகு மருத்துவர்கள் அறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மின்கசிவு ஏற்பட்டவுடன் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் மின்கசிவு, குழந்தைகளின் நலன் மற்றும் அச்சத்திலிருந்த பெற்றோர், உறவினர்களுக்கு அறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவைச் சரிசெய்ய பொதுப் பணித் துறை மற்றும் மின்சார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது துரிதமாகச் செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.







