சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில், கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில், மருத்துவர்கள் தங்கியிருக்கும் அறையில், குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அவசரப் பிரிவில் இருந்த குழந்தைகள் வேறு அறைக்கு உடனடியாக மாற்றப் பட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். புகைமூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷயம் கேள்விபட்டு உடனடியாக அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, 47 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக, நலமாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் பதற்றமடைய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.







