காஷ்மீரின் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ராணுவ வீரர்களின் எதிர்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திரம் தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை தொடர்ந்து நாட்டின் எல்லைப்பகுதிகள், சர்வதேச விமானநிலையங்கள், முக்கிய நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், ரயில் நிலையங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுவல் சம்பவங்களும், போதைபொருள்கள், ஆயுதங்கள் கடத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறும். நாட்டின் சுதந்திரம் தின கொண்டாட்டங்களையொட்டி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ சிலர் முயன்றுள்ளனர். அவர்களை நிற்கும்படி கூறி பாதுகாப்பு படையினர் தடுத்ததையடுத்து திடீரென ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து படையினரும் அதற்கு பதிலடி கொடுத்தனர்.
தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். எனினும், பயங்கரவாதிகள் திடீரென உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். ராணுவ படை தளத்தின் மீது நடந்த இந்த தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர்.
ராணுவத்தின் பதிலடி துப்பாக்கி சூடு சம்பவத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார். தொடர்ந்து படை வீரர்களின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.







