நண்பனின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஓராண்டு காத்திருத்து கொலை செய்த சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த திருவேற்காடு, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(28), திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த 2021ம் ஆண்டு சண்முகம் என்பவரை திருவேற்காட்டில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது கொலை வழக்கு, கஞ்சா விற்பபனை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று இரவு கோயம்பேடு, மந்தைவெளி தெருவில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது வழி மறித்த மர்ம கும்பல் ராஜ்குமாரை ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இதில் ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு உதவி கமிசனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு 2021ல் திருவேற்காட்டில் கஞ்சா விற்பனை செய்வதில் இரண்டு குரூப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன் விரோதம் காரணமாக சண்முகம் என்பவரை ராஜ்குமார் கூட்டாளிகளுடன் கொலை செய்ததாகவும் அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக சிறையில் இருந்து வெளியே வந்த ராஜ்குமாரை கண்காணித்து சண்முகத்தின் நண்பர்கள் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவேற்காட்டை சேர்ந்த குமார் (52), அவரது மகன் லால் (என்ற)பிரகாஷ் (29), நாகராஜ்(44), ராகுல்(19), சுந்தர் (21), ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் திருவேற்காட்டில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலில் கடந்த ஆண்டு சண்முகத்தை, ராஜ்குமார் தரப்பினர் படுகொலை செய்தனர். அந்த கொலைக்கு பழி வாங்கும் விதமாக சிறையில் இருந்து ராஜ்குமார் ஜாமினில் வரும் வரை காத்திருந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. நண்பனை கொலை செய்த வழக்கில் ஒரு வருடம் காத்திருந்து கொலை செய்த சம்பவத்தில் தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.







