கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி  தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

இதனை தொடர்ந்து சிபிஐ கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது. குறிப்பாக எஸ்ஐடி குழுவிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து, எஸ்.பி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள்  விசாரணையை தொடங்கினர். கரூரில் கூட்டம் நடைபெற்ற சாலையின் விவரங்களை சிபிஐ அதிகாரிகள் கணக்கிடப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்ட நபர்களிடம் காட்சியங்கள் பெறுவதற்கான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று கரூர் சிபிஐ அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது, வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  10 உதவி ஆய்வாளர்களுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் படி சம்பவ நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் தற்போது  கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கோள்ள இருக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.