நடிகர் விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. கரூர் தொடர்பான வழக்கு பிப்ரவரி 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தவெக தலைவரும், நடிகருமான விஜயின் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. ஆனால் கரூர் வழக்கை ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என தவெக தரப்பிலும், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல தனி நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வழக்கு விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கரூர் சென்ற சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
அதன் பின் கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடமும், தவெக நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தியதோடு தவெக தலைவர் விஜய்யை இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி சுமார் 13 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலவரம், விபரங்கள் குறித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 3ம் தேதி கரூர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுடன் ஆலோசனை நடத்தி சி.பி.ஐ தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.







