மறைந்த ஏ.வி.எம்.சரவணனுக்கு இரங்கல் – சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

இன்றைய சட்டசபை கூட்டம் தொடங்கியதும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று (20.1.26) தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் மு.அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.