கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனிஉத்திரப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்
அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் வருடந்தோறும் பங்குனி
உத்திரப் பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில் இந்த
ஆண்டின் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோவில் உள்பிரகார மண்டபத்தில் நடைபெற்றது. அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி,
செளந்தரநாயகி உற்சவர்களும் மண்டபத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு வேதங்கள்
முழங்க வேத விற்பன்னர்கள் தாலி கட்டும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மஹா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. இதனை ஏராளமானப் பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
—ரெ.வீரம்மாதேவி







