கர்நாடகா : சாலைகளை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.   தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி…

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததோடு, சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், தற்போது மழை வெள்ளம் வடிந்த நிலையில், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. மழை வெள்ளத்தில் இருந்து மீண்ட பொதுமக்கள் தற்போது சாலைகள் பராமரிப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் உடுப்பி – மணிப்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ரோடு பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. சாலையை அரசு அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. காவி உடையணிந்து கொண்டு, சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்த அவர் பள்ளம் மேடாக உள்ள சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் நித்தியானந்தா கூறும்போது, மழை வெள்ளத்திற்கு பிறகு சாலைகள் படுமோசமாக மாறிவிட்டதாகவும், அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்பதற்காக இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் பிரச்சனைகளுக்கு இவர் விநோதமான முறைகளில் போராட்டம் நடத்தி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.