முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

மகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை!

உடல் நலமில்லாத மகனுக்கு மருந்து வாங்குவதற்காக சுமார் 300 கி.மீட்டர் சைக்கிளில் சென்ற பாசக்கார தந்தையை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது நரசிபூர் தாலுகா. இங்குள்ள கனிகனகோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவருக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (nimhans) இரண்டு மாதத்துக்கு ஒரு முறை இலவசமாக மருந்து வழங்கப்பட்டு வந்தது.

மருத்துவர்கள் ஒரு நாள் கூட மாத்திரை சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அவர் மே மாதத்துக்கான மாத்திரையை வாங்க, பெங்களூரு செல்ல வேண்டும். அதற்குள் லாக்டவுன் பிறக்கப்பட்டு விட்டதால், போக்குவரத்து வசதி இல்லை.

இதனால் தனக்குத் தெரிந்த, அக்கம் பக்கத்து நண்பர்களிடம் இருசக்கர வாகனத்தைக் கேட்டுப் பார்த்தார். தெரிந்தவர்கள் அனைவரும் அமைதியாக மறுத்துவிட்டனர். லாக்டவுன் நேரத்தில் பைக்கில் சென்றால், போலீஸ்காரர்கள் அதை பறித்துவிடுவார்கள் என்று பயந்தனர்.

என்ன செய்யலாம் என்று யோசித்த ஆனந்த், சத்தம் போடாமல் சைக்கிளில் செல்வது என்று முடிவு செய்தார். அதன்படி தனது கிராமத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணிக்கு புறப்பட்ட அவர், 2 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையை அடைந்தார். அங்கு இவர் நிலையை கேட்டு மருத்துவர் ஒருவர் ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். வழியில் தங்கிய இடத்தில், சிலர் அவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளனர்.

பின்னர் புதன்கிழமை இரவு, அவர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதுபற்றி ஆனந்த் கூறும்போது, ‘எனது சைக்கிள் மிகவும் பழையது. இருந்தாலும் அதில் சென்று மருந்து வாங்கிவிட்டு வந்துவிட்டேன். மருத்துவர்களும் செவிலியர்களும் எனக்கு உதவினர். என் மகனுக்கு சரியான நேரத்தில் மாத்திரையை வாங்கிவந்துவிட்டேன். வந்த பிறகு எனது இடுப்பில் கடுமையான வலி. தொடர்ந்து நான்கு நாட்கள் சைக்கிள் மிதித்து வந்ததால் ஏற்பட்ட வலி அது. பிறகு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஆனந்த்.

Advertisement:

Related posts

சிஏஏ போராட்டம்: சஃபூரா சர்கா கைதுக்கு ஐநா கண்டனம்!

Jeba

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Jayapriya

கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

Ezhilarasan