நடப்பு ஆண்டிற்கான பொருளாதார வீழ்ச்சியானது கடந்த 40 ஆண்டுகளின் ஏற்பட்டுள்ள மாபெரும் பொருளாதார வீழ்ச்சி எனவும், பொருளாதாரத்தில் இந்த ஆண்டு கருப்பு ஆண்டு எனவும் முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் மாபெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியானது தொடர்ந்து நீடித்துவருகிறது என்பது தற்பொழுது மத்திய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள ஜிடிபி சதவீதத்தின் அடிப்படையில் நன்றாகத் தெளிவாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான பொருளாதார ஜிடிபியின் சதவிகிதமானது -7. 3 சதவீதமாகச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா முதல் அலை தீவரமாகப் பரவியதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 2020 ஆண்டிற்கான பொருளாதார ஜிடிபியானது -24.4 சதவீதம் எனும் பெரும் சரிவைச் சந்தித்தது. இதுவே கடந்த 40 ஆண்டுகளில் நாடு சந்தித்த மாபெரும் சரிவாகப் பதிவானது. இந்த சரிவானது ஆண்டின் முடிவில் சற்று குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிடிபி சதவீதமானது இந்த ஆண்டி துவக்கத்தில் (ஜனவரி – மார்ச்) 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. என்னதான் சற்று உயர்ந்திருந்தாலும் தற்போது வந்துள்ள புள்ளிவிவரப்படி இந்த நடப்பு ஆண்டின் (2020 – 2021) ஜிடிபியானது – 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதனை முன்னால் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மாபெரும் பொருளாதார வீழ்ச்சியாக உள்ளது எனவும், இந்த ஆண்டு பொருளாதாரத்தில் கருப்பு அண்டு எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜிடிபி சதவீதம் -7.3 ஆகக் குறைந்துள்ள நிலையில்,2020 – 2021 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 9.3 ஆக அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது!







