விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுமதி இன்றி இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திரு.ராம்பிரகாஷ்(வயது 32), த/பெ. ரவீந்திரன், திரு.ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன். திரு. இன்னாசிமுத்து (வயது 44), த/பெ. சிங்கராஜ் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த திரு. பாண்டித்துரை (வயது 35). த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




