கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு யு.டி.காதர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 20ம் தேதி பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா , கே.ஜி.ஜார்ஜ் எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே , ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை தொடர்ந்து, முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும், அமைச்சர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.கார்கே உள்ளிட்ட எட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், டிப்ளமோ முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்போருக்கு மாதந்தோறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் உதவித்தொகையாக வழங்கும் திட்டத்திற்கும், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சபாநாயகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த யு.டி.காதர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். கர்நாடக சட்டமன்றமான விதான் சவுதாவின் இளம் சபாநாயகராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







