“இளைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி நிதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11 வது கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ள நிலையில் முதலமைச்சர் மேற்காசிய போர் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அதன்படி, அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் கருத்துப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி மாநிலங்கள் இணைந்து செயல்படுவதற்கு நிதி ஆயோக் முக்கிய தளமாக அமைய முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், உலகம் தற்போது நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற சூழலை எதிர்கொண்டு வந்தாலும், இந்தியா தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு நகர்ந்து வரும் நிலையில், அனைவரின் கூட்டுப் பொறுப்பும் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை நாட்டிற்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு என்றும், அதை இழக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குறிப்பாக, தரமான கல்வி, தேவைக்கேற்ப திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கான சரியான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், அதிகாரமளிக்கப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முக்கிய சக்தியாக இருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பல நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) மேற்கொண்டிருப்பதாகவும், அவை ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் பேசியுள்ள பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வதன் மூலம் நம் நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உலக சந்தைகளில் போட்டியாக உருவாகும் என பேசியுள்ளார்.

மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் முக்கிய அடித்தளமாக விளங்குகிறது என்றும், வேளாண்மை, தொடக்க நிறுவனங்கள், அறிவியல் மற்றும் புதுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பெண்களின் முழுத் திறனை வெளிக்கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த மாநிலங்கள் பெண்களின் கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.