கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கண்டா வரச்சொல்லுங்க உள்பட அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாரி செல்வராஜ் ஏற்கனவே இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றதோடு, சாதி ஆதிக்க மனநிலைக்கு எதிரான புதிய விவாதத்தையும் தொடங்கிவைத்தது. இதனால் அவரின் இரண்டாவது திரைப்படமான கர்ணனுக்கும் எதிர்பார்ப்புகள் குவிந்தது. அதேபோல அசுரன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷின் மாறுபட்ட நடிப்பைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அதில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், ஷாப்பிங் மால்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, “திட்டமிட்டப்படி நாளை கண்டிப்பாக கர்ணன் திரைப்படம் வெளியாகும், அதில் மாற்றம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கர்ணன் திரைப்படம் வெற்றியடையும், எதிர்பார்க்கும் அளவிற்கு வசூல் செய்யும் என நம்பிக்கை உள்ளது என்றும் தாணு கூறியுள்ளார். இதேபோல இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் வருவான் என ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.