கணியாமூர் கலவரம்; தகவல் தராத டெலிகிராம்?

கணியாமூர் கலவரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்திடம் தகவல் அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியும், டெலிகிராம் தரப்பில் தகவல் தரப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில், 12-ஆம் வகுப்பு மாணவி மரண…

கணியாமூர் கலவரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்திடம் தகவல் அறிக்கை கேட்டு கடிதம் அனுப்பியும், டெலிகிராம் தரப்பில் தகவல் தரப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில், 12-ஆம் வகுப்பு மாணவி மரண விவகாரத்தில், கடந்த 17-ஆம் தேதி கலவரம் வெடித்தது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் #JUSTICEFORSRIMATHI என்ற ஹேஷ்டேக் மூலம் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட நபர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு காவல்துறை சார்பில் டெலிகிராம் நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், வாட்ஸ் அப் குழுக்களை விட டெலிகிராம் குழுவில் தான் அதிகப்படியான நபர்கள் இணைந்துள்ளதாகத் தெரியவந்த தகவலின் அடிப்படையில் டெலிகிராம் நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. கணியாமூர் கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் சிலர், பள்ளி அலுவலகம், வகுப்பறைகளிலிருந்த மேஜை, மின்விசிறி, நாற்காலி உள்ளிட்ட பொருட்களைத் தலையில் சுமந்தும், வாகனங்களில் வைத்தும் கொண்டு சென்றனர். மேலும், போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்களைமீட்பதற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘‘அந்த எண்ணம் கூடவே கூடாது’ – மாணவர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்’

தற்போது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி பாதிக்காத வகையில் மீண்டும் வகுப்புகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீடியோ பதிவுகள் மூலம் ஆள் அடையாளம் கண்டு, கலவரத்தின்போது பள்ளியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருட்களை மீட்பதற்காக 18 பேரைக் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.