தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!

தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கலை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக சுற்றுலாதளங்கள் அனைத்திலும் மக்கள் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா நகரமான உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில்…

தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கலை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக சுற்றுலாதளங்கள் அனைத்திலும் மக்கள் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா நகரமான உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.  அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நீலகிரி மலையில் வாழக்கூடிய தோடர்,  படுகர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு நடனமாடி விழாவை சிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடி போட்டியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் உட்பட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உரியடித்து மகிழ்ந்தனர்.  பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு சாக்கு போட்டி, மியூசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான
குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் காணும்பொங்கல் தினத்தை முன்னிட்டு
ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அருவிகளில் குளிப்பதற்காக குவிந்தனர்.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி,  ஐந்தருவி,  பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி போலீசார் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் வருகையால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காணும் பொங்கலையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.  காவல்துறையினர் பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடைவிதித்துள்ள நிலையில் ஆபத்தை உணராமல் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி செய்தனர்.

மேலும் தடைசெய்யப்பட்டுள்ள படகு சவாரியை மீண்டும் பாதுகாப்பு வசதிகளுடன் தொடங்கிடவேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.