பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006ம் ஆண்டில் ‘மாதா’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’ திரைப்படம் 2009ம் ஆண்டின் கர்நாடக மாநில திரைப்பட விருதினைப் பெற்றது. ஆனால், 2024ம் ஆண்டில் வெளியான ‘ரங்கநாயகா’ படம் வசூலில் பெரும் சரிவைக் கண்டது. இவர் 2014ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் 2-ம் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, அண்மையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், இன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரது வீட்டுக்குள் சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது, வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் குருபிரசாத்தின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… #Ooty மலை ரயில் சேவை நவ.5ம் தேதி வரை ரத்து!
இந்த நிலையில், இவர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரை மாய்த்து கொண்ட குருபிரசாத்-க்கு பொருளாதார நெருக்கடி ஏதும் இருந்ததா என்ற கண்ணோட்டத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







