அனல் பறக்கும் அரசியல் அரங்கத்திலும், ஆளுமைகள் வீற்றிருக்கும் இலக்கிய அரங்கத்திலும் கண்ணியமான பேச்சுக்கும் கனிவான குரலுக்கும் சொந்தக்காரர் என்றால் அவர் திமுக எம்பி கனிமொழி கருணாநிதிதான். கருணாநிதியின் மகள் எனும் அடையாளத்துடன் அரசியல் களத்தில் நுழைந்த கனிமொழி, தற்போது தனக்கென் தனி அடையாளத்துடனும் ஆளுமையுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் இன்றைக்கு தமிழ்நாட்டின் முகமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் போர் முரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்மையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கனிமொழி கலந்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திராவிட கருத்தியலை பிரதான கொள்ளையாக கொண்ட எம்பி கனிமொழி, அதே அளவுக்கு மதச்சார்பற்ற கொள்கைகளை வலியுறுத்துவதிலும் உறுதிகொண்டவர். இதன் காரணமாகதான் மதச்சார்பற்ற கொள்கையை பிரதானமாக கொண்ட ராகுல்காந்தியின் நடைபயணத்தில், கனிமொழி பங்கேற்றார். அதேபோல், இந்திய- சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதல், தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி, துறை அமைச்சருக்கு மனு அளித்தது மற்றும் போட்டி தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தல் என, கனிமொழியின் நாடாளுமன்ற அரசியல் நடவடிக்கைகள் மக்களிடம் கவனம் பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், தமிழ்நாட்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, கனிமொழியின் எண்ணத்தில் உருவான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சியை, தற்போது மீண்டும் நம்ம ஊர் திருவிழா என்ற பெயரில் ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியில் ஈடுப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள நம்ம ஊர் திருவிழா, மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி, அரசியல் களத்திலும் சரி.. அறிவார்ந்த தளத்திலும் சரி.. தன் தந்தை கருணாநிதிக்கு இணையாக அனைவராலும் கவனிக்கப்படும் நபராக வலம் வந்துகொண்டிருக்கும், கனிமொழியின் அரசியல் பாதை பூ மெத்தைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. அதில், பல முட்களையும் அவர் கடந்து வரவேண்டியிருந்தது.
“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று நேரு காலத்திலேயே உரிமைக்குரல் எழுப்பியவர் அண்ணா. தமிழ்நாட்டின் உரிமை முழக்கம், மத்திய ஆட்சியாளர்களுக்கு கேட்க வேண்டும் என்பதே அண்ணாவின் முழக்கத்தின் அச்சானியாக இருந்தது. அண்ணாவின் இவ்வழியை தவறாது பின்பற்றிய தம்பியாக கருணாநிதியும் வடக்கு நோக்கி முழங்கினாலும், நாடாளுமன்றத்தில் கால்பதித்து கர்ஜிக்கும் வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால், ஒரு கருணாநிதி இல்லையென்றால் என்ன, நூறு கருணாநிதிகளை உருவாக்குவேன் என்று, திமுகவிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து, வடக்கை அதிரவைத்தார் கருணாநிதி. அவர் இல்லையென்றாலும், அவர் வழிநின்று, எளிய மக்களின் பிரதிநிதியாக, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக, சமூகநீதி பயணத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, நாடாளுமன்றத்தில் வெடித்து முழங்கி வரும் பெண் சிங்கம் தான் கனிமொழி கருணாநிதி.
ஆகையால் தான், 2007ல் நாடாளுமன்றத்தில் கனிமொழி தனது கன்னிப்பேச்சை முடித்து அமர்ந்த போது, மூத்த நாடாளூமன்ற உறுப்பினரான கபில்சிபில் நேராக கனிமொழியின் இருக்கைக்கே வந்து, கைக்கொடுத்து பாராட்டு தெரிவித்தார். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், ”உங்களின் அறிவார்ந்த பேச்சுக்கு பாராட்டுகள்” என ஒரு காகிதத்தில் எழுதி, அதனை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா மூலமாக, கனிமொழிக்கு அனுப்பி வைத்தார். அந்தளவுக்கு அனைவரையும் கவர்ந்தது, கனிமொழியின் அறிவார்ந்த பேச்சும், எதிர்கட்சியினரை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகளும்.
இதற்கெல்லாம் விதை போட்டது 2007ம் ஆண்டு தேர்தல். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் கனிமொழியின் பெயர் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் வெற்றிபெற்று மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, தனது முதல் உரையை அந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஆற்றினார். முதல் உரையே முக்கிய உரையாக அமைந்தது. இந்திய அமெரிக்க இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தியே அவரின் முதல் உரை அமைந்திருந்தது. அதில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய புதிய தொழிற்சாலைகள் தாமதம் ஆவது குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் பேசினார். காற்றாலை மின்சாரம் மற்றும் நிலக்கரி மின்சாரம் இடையேயான வேறுபாடு குறித்தும் அவையில் விளக்கிப் பேசினார். சுமார் பத்து நிமிடங்களுக்கு நீடித்த அவரின் உரை, முதல் உரையை போல இல்லாமால், அரசியலில் பல வருட அனுபவசாலியின் உரையை போல இருந்ததாக அதனை கேட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து, மூத்த உறுப்பினர்களான சீதாராம் யெச்சூரி, ராம்ஜெத்மலானி போன்றோர் பேசியபோது கூட அமளி நிலவியது. ஆனால், கனிமொழி உரை ஆற்றியப்போது அனைவரும் அமைதி காத்து, அவரின் பேச்சுக்கு செவி கொடுத்தனர்.
அன்று தொடங்கி, தனது நாடாளுமன்ற உரைகளின் மூலம் தொடர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கனிமொழி. ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட தருணம் அது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கனிமொழி பேசினார். இந்த காலக்கட்டத்தில் தான் பெரும் சோதனை கனிமொழியை சூழ்ந்தது. அது திமுக தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. 2011ல் 2ஜி அலைக்கற்றை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார் கனிமொழி. ஆனால், உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என அரசு தரப்பை சாடிய நீதிபதி ஓ.பி.ஷைனி, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2013 ம் ஆண்டுடன் முடியவே, 2013ல் நடைபெற்ற தேர்தலிலும் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக, தேர்வு செய்யப்பட்டார்.
தனக்கு எதிராக என்ன நடந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், வழக்கு ஒரு புறம், மக்கள் பணி ஒருபுறம் என அயராது உழைத்தார். சற்றும் மனம்தளராது, கூடுதல் உற்சாகத்துடன் கட்சி பணிகளையும் கவனிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பினார் கனிமொழி. இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக இருந்தது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம். மாநிலங்களவையில், 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவாக டி.கே.ரங்கராஜனின் ஆதரித்து பேச, அதிருப்தி அடைந்த கனிமொழி ‘என்ன இது அநியாயமா இருக்கு?” என்று கொந்தளித்தார். இடஒதுக்கீடு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக, மத்திய அரசு அநீதி இழைத்திருப்பதாக விமர்சித்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படி பல்வேறு சூழலிலும் தனது கருத்தை முன்வைப்பதற்கு கனிமொழி தவறியதில்லை. இதனாலேயே, பிரபல செய்தி நிறுவனமான லோக்மட், 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை கனிமொழிக்கு வழஙகி கவுரவித்தது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களம் கண்டார் கனிமொழி. நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது அதுதான் முதல்முறை என்பதால், வெற்றிப்பெற முழு வீச்சில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் போட்டியிடும் அதே தூத்துக்குடி தொகுதியில்தான் அன்றைய பாஜக மாநில தலைவர் தமிழிசையும் போட்டியிட்டார். இருப்பினும், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார் கனிமொழி. மக்களவையில் உளமார உறுதி ஏற்றதோடு, “வாழ்க தமிழ், வாழ்க பெரியார்” என முழங்கினார். அன்றிலிருந்து நாடாளுமன்ற விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஆவேச குரல் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு காலத்திலும், தமிழ்நாடெங்கும் பேசப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகிய தந்தை மகன் மரணச் சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஊடகங்கள் மூலம் அப்போதைய அரசை அழுத்தமாக வலியுறுத்தினார் எம்.பி கனிமொழி.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, பின்னர் அதேபெண் விபத்தில் சிக்கியது நாடு முழுவதும் சர்ச்சை அலைகளை ஏற்படுத்தியது. ”பிரதமர் மோடி கூறிய ‘மேக் இன் இந்தியா’வை விட, இந்தியாவில் ‘ரேப் இன் இந்தியா’ தான் அதிகரிக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இது குறித்து ஆளும் மற்றும் எதிர் கட்சிகளுக்கு இடையே பெரும் அமளி எழுந்தது. அத்தனை அமளிக்கு நடுவிலும் எழுந்து நின்று பேசத் தொடங்கினார் கனிமொழி. டி.ஆர்.பாலு, கனிமொழியை சற்று பொருமை காக்க கூறியும், இது பெண்கள் தொடர்பான பிரச்னை என்பதால், அமைதி காக்காது தன் உரையை தொடர்ந்தார் கனிமொழி. “’மேக் இன் இந்தியா’ என்று பிரதமர் கூறினார், அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? அதைத்தான் ராகுல் காந்தி வெளிகொண்டுவர நினைத்தார். துரதிருஷ்டவசமாக இந்தியாவில் ”மேக் இன் இந்தியா” நடக்கவில்லை. நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தான் நடக்கிறது. இது வேதனை அளிக்கும் விஷயம்” எனக் கூறினார். இதனை கேட்டதும், மேலும் அமளி அதிகரித்தது. ஆனால், கனிமொழி முகத்தில் அச்சமோ, பதட்டமோ தென்படவில்லை. தான் பேசியது 100க்கு 100 சரிதான் என்கிற தோரணையில் அமர்ந்திருந்தார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது, பல்வேறு சர்ச்சைகளையும் கட்டவிழ்த்து விட்டது. இந்த விவகாரத்தில் ”யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது” என திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பாத்திமாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாமானியரான பாத்திமாவின் தந்தை லத்தீஃப் வலியுறுத்தியதை நாடாளுமன்றத்துக்கு கொண்டு சேர்த்தார் கனிமொழி. இதுபோன்று, மாணவர்கள் நலனில் மட்டுமின்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்னைகளையும் நாடாளுமன்றம் கொண்டு சேர்த்தார். “ஒன்றிய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்,” என்று மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் பதிவு செய்திருக்கிறார் கனிமொழி.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பினார். மாநில அரசுகள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தினார். எந்த முக்கிய பிரச்னைக்கு நடுவிலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடைப்பற்றி அவர் கேள்வி எழுப்பாது இருந்தது இல்லை. ஜீரோ கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, `மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகளாகின்றன. ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை’ என்று வருத்தம் தெரிவித்தார்.
மக்களை வஞ்சிக்கும் மசோதாக்கள் குறித்த விவாதங்களில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத போது, அதனை தனது வாக்கின் மூலம் வெளிபடுத்தி விடுவார் கனிமொழி. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற அவைகளில் தன் எதிர்ப்பை பதிவு செய்தார் கன்மொழி. முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை விமர்சித்தவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’என குறிப்பிட்டார். அதுபோல, ”புதிய மீன்பிடி மசோதா” ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்களை கடிதம் மூலம் உரிய அமைச்சரிடம் தெரிவித்ததாக பேட்டியளித்தார். மிகவும் கடுமையான தண்டனைகள் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்றும், அதனை எதிர்ப்பதாகவும், அது மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லுமே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்றும் கூறினார். சிஏஏ, என்.ஆர்.சி, நீட் போன்ற பலப் சட்டங்களுக்கும், மசோதாக்களுக்கும் எதிராகவும் போராட்டங்களையும் நடத்தினார் கனிமொழி.
சுதந்திர போராட்டத்துக்கு பிறகு நாட்டையே தன் பக்கம் திருப்பிய போராட்டம் தான், வேளாண் புதிய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் எழுப்ப முயன்றபோது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்தெல்லாம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருத்தப்படவில்லை. டெல்லி – உத்தர பிரதேசத்தை இணைக்கும் காஸிபூர் பகுதிக்கு சென்று போராட்டத்தில் இருந்த விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, போராடும் விவசாயிகள் அடிப்படையில் இந்திய குடிமக்கள். தங்களுடைய உணர்வுகளை கூட ஜனநாயக முறையில் வெளிப்படுத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஏதோ போர் மண்டலத்தில் இருப்பது போல, கோட்டை அரண்களை போல காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது என்ன இந்தியாவா, சீன எல்லையா? என கேள்வி எழுப்பியதையும் யாரும் மறந்துவிட முடியாது.
பிரதமரால் அறிவிக்கப்படும் திட்டங்களின் பெயர்களை, உச்சரிப்பதற்கு கூட தடுமாறும் பட்சத்தில், அந்த திட்டம் குறித்த பயன்கள் மக்களை எப்படி சென்றடையும்? என கேள்வி எழுப்பினார் கனிமொழி. இந்தியில் உள்ள திட்டப் பெயர்கள் புரியும்படி இல்லை என்றும், பெயரை உச்சரிக்கவே கடினமாக இருக்கும்போது, அந்த திட்டத்தின் பயன்களை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என வினவினார். அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர், “உங்களுக்கு புரியாமல் போனால் நாங்கள் என்ன செய்வது?” என கேட்க, அதற்கு சட்டென்று பதிலடி தந்த கனிமொழி “அப்படி என்றால் நான் தமிழில் பேசுகிறேன்.. உங்களுக்கு புரியுதா என்று சொல்லுங்கள்” என்றார். அந்த நொடியே மக்களவையே கலகலப்பானது. அது சிந்திக்கக் கூடியதாகவும் இருந்தது.
இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செயதார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், குழு அமைக்கப்பட்டது. அப்போது, ‘‘பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தவிர வேறு எந்த ஒரு மசோதாவையும் யாருடனும் கலந்தாலோசிப்பதில் மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை. குழந்தை திருமண தடைச் சட்டத்தில் மாற்றம் செய்ய முயலும் அரசு அதற்கு முன்பாக விரிவான விவாதம் நடத்தியிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார் கனிமொழி. மேலும், 31 பேர் கொண்ட குழுவில் திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ் மட்டுமே பெண் எம்.பி. என்பதும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி, 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்; ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்; பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர், பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர்” என கண்டித்திருந்தார்.
கனிமொழி திமுகவின் “நாடாளுமன்ற புலி” என 2019 தேர்தலின் போதே உளம் திறந்து பாராட்டியிருந்தார் ஸ்டாலின். தன் பெயருக்கு ஏற்றார் போல் கனிவான அன்புடையவர் கனிமொழி. குழந்தைத் தன்மையுடன், மற்றவர்களுடன் பழகுவதில் எப்போதும் எளிமையானவராக உள்ள கனிமொழி, பொதுமக்களின் பிரச்னைகள் என்று வந்துவிட்டால் அதனை தீர்ப்பதில் ஒரு போராளி போல் செயல்பட்டு வருகிறார். கேள்வியே கேட்கப்படாத சமூகம் சீரழிந்து போகும்” என்று அடிக்கடி கூறும் கனிமொழி, தான் எழுப்பும் கேள்விகளால் நாடாளுமன்றத்தையே அதிரவைக்கிறார். கேள்வி எழுப்புவதோடு நிறுத்திவிடாமல், அதனை மக்கள் போராட்டமாக மாற்றும் வல்லமைப் படைத்தவராகவும், பெண்களுக்கு ஒரு முன்னுதாரனமாகவும் விளங்குகிறார். திராவிட இயக்க பின்னணயில் இருந்து வந்தவர் என்பதும் எந்த எதிர்ப்புக்கும் அச்சப்பாடாத அவரது செயல்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு பொது வாழ்க்கையில் இருக்கும், பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால்?… தங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாததே. ஆனால் கனிமொழி இதற்கு விதிவிலக்கு. குடும்பத்தினரை இறுகப்பற்றிக் கொண்டு பாச அத்தியாயம் எழுதுபவர். போராட்ட களங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களுக்காக டெல்லிப்பயணம், சொந்த தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதென்று, சுழற்காற்றாக சுழன்று கொண்டிருந்தாலும். குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. அதே நேரத்தில் சொந்த வாழ்க்கையிலும் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருக்கிறார்.
1968ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் பிறந்த கனிமொழியிடம் கருணாநிதியைப் போலவே கலையார்வமும், இலக்கிய ஆரவமும் இயல்பாகவே இருந்தது. கருணாநிதியிடம் பெற்றுக் கொண்ட தமிழ் தான் பின்னாட்களில் அவரை ஒரு இதழியலாளராகவும், கவிஞராகவும் மாற்றியது. தி ஹிந்து பத்திரிகை, குங்குமம் வார இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். குங்குமம் உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றினார். அத்துடன், எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து மின்னம்பலம் இணையதளத்திலும், கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்ற அமைப்பிலும் பணியாற்றியுள்ளார். எழுத்துத் தளத்தில் அரசியல் கடந்து எல்லோரிடமும் நட்பு பாராட்டும் மனப்பாங்கு எல்லாமே கருணாநிதியின் பிரதிபலிப்பு. பல மேடைகளில் கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவே புகழப்பட்டார்.
கனிமொழி, கருணாநிதியின் இலக்கிய வாரிசாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விடுவார். கருணாநிதியைப் போல அரசியலில் கால்பதிக்க மாட்டாரென்று பலரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் நடந்தது வேறு. அரசியலில் கால்பதிக்க வேண்டும் என விரும்பிய தொண்டர்கள் ஸ்டாலின், அழகிரி, வரிசையில் கனிமொழியின் பெயரையும் வரிசைப் படுத்தியிருந்தனர். இதன் பிறகே, 2007ல் மாநிலங்களவை உறுப்பினராக முதல் அடியை எடுத்து வைத்தார் கனிமொழி. இதற்கு அச்சாரம் போட்ட சம்பவம் 2001ல் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தாண்டு ஜூன் இறுதியில் நள்ளிரவில் வைத்து திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, நாடே ஒரு கணம் அதிர்ந்துதான் போனது. கைதான கருணாநிதியிடம் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அலைக்கழித்தது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, சென்னை மத்திய சிறை வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் கருணாநிதி. அவர் அருகில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண் தான் கனிமொழி. அப்போதுதான் கனிமொழியை பலரும் அறிந்துகொண்டனர்.
அதன்பிறகு எழுத்து, கவிதை, இலக்கியம், பத்திரிகை என பறந்து விரிந்தது அவர் உலகம். அதில் அரசியலும் இணைந்து கொண்டது. எத்தனையோ ஏற்றத்தையும் கண்டுவிட்டார். பொதுவாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எவ்வளவோ இறக்கங்களையும் சந்தித்துவிட்டார். “படவேண்டிய எல்லா அடியையும் பட்டாச்சு. இனி எந்தக் கஷ்டத்தாலும் என்னை வருத்தப்பட வைக்கமுடியாது. பரபரப்பு, குற்றச்சாட்டு, கைது, விமர்சனம், அவமானம், துரோகம், துயரம், எதிர்ப்பு, ஏமாற்றம்னு எல்லாத்தையும் கடந்தாச்சு. சாவைத் தவிர சகலத்தையும் பார்த்தாச்சு. எதையும் எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலைதான் ரொம்பப் பெருசு!” தான் கடந்த வந்தது அழகிய மலர்ப்பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதையென்று வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் கனிமொழி.
2ஜி வழக்கில் மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி தான் நிரபராதியென்று நிரூபித்துவிட்டு தமிழகம் வந்த கனிமொழி, பணம் சம்பாதிக்க நினைத்திருந்தால் 20 வயதிலேயே நான் அரசியலுக்கு வந்திருப்பேன்.. 40 வயதில் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். பதவி ஆசை இருந்திருந்தால், மிக எளிமையாக தம்மால் அமைச்சராகி இருக்க முடியும் என குறிப்பிட்டார். ஆணாதிக்கம் மிகுந்த கரடு முரடான பாதைகள் கொண்ட அரசியலில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும்,விமர்சனங்களுக்கும் செயல்வடிவில் பதில் தரத் தொடங்கினார். பேராளுமையின் மகளென்றாலும் அதை பயன்படுத்திக் கொள்ள மறுத்தார். ஒற்றை ஆளாய் களம் காணத் தொடங்கினார். பிரதமர் மோடியின் “ஆதர்ஷ் கிராம யோஜனா” திட்டத்தின் மூலம் சோனியா, ராகுல் காந்தி, சச்சின் போன்றவர்கள், கிராமங்களைத் தத்தெடுக்கத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிரிவெங்கடேஷபுரத்தை தத்தெடுத்தார்.
அன்றிலிருந்தே தூத்துக்குடி மாவட்டத்தில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியைச் சேர்ந்த கிராமங்களிலும் கனிமொழியின் கால்படாத கிராமமே இல்லையென்று சொல்லலாம் . கெரோனா காலத்திலும் தான் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து களப்பணிகளை முடுக்கிவிட்டார். எந்த நேரத்திலும் அணுகி உதவி கேட்கலாம் என்ற அளவிற்கு மக்களிடையே மிக நெருக்கம் காட்டினார். சமூகநீதி பேசும் படங்களை ஆதரிப்பது, இணையப் பக்கங்களில் அரசியல் கருத்துகளுக்கு எதிர்விணையாற்றுவது என தன்னை அப்டேட்டாக வைத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஆணித்தரமாகக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகளில் கனிமொழி முக்கியமானவர். விஜய் சேதுபதியின் “800” பட சர்ச்சையில் அவரது மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்து முதல் ஆளாய் குரல் கொடுத்தவர் கனிமொழிதான். பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம். சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு போராளி போல் செயல்படும் கனிமொழி, மற்றவர்களுடன் பழகுவதில் எப்போதும் எளிமையானவராகவே இருக்கிறார்.
ஆணாதிக்கம் மிகுந்த கரடு முரடான பாதைகள் கொண்ட அரசியலில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் செயல்வடிவில் பதில் தரத் தொடங்கினார். அதற்கு அவருக்கு பரிசாக கிடைத்தது தான் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவி. இதனையடுத்து, சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார் கனிமொழி. இதன்மூலம், கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து திமுகவில் முக்கிய பொறுப்புக்கு வந்த ஐந்தாவது நபராக வள்துள்ளார் கனிமொழி. இவ்வாறு தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் முக்கியமான அரசியல் ஆளுமையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் கனிமொழி கருணாநிதி.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட கனிமொழியின் சேவை, அரசியலுக்கு அப்பாற்பட்டு மாற்றுக் கட்சியினரையும் கவர்ந்தவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.