திமுக மதத்திற்கு எதிரி அல்ல என்றும் மதவாதத்திற்குதான் எதிரி என்றும், இந்து சமய அறநிலையத்துறை விழாவில் பேசும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2500 கிராமப்புற திருக்கோயில்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் நிதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, ஆன்மீக சான்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிதியை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாம் கடந்த 2022ம் ஆண்டில் 640க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அதில் 25 நிகழ்ச்சிகள் இந்து சமய அறநிலையத்துறையின் நிகழ்ச்சிகள் என்றும் தெரிவித்தார். அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்று பாடுபடுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதங்களில் திமுக பேதம் பார்க்காது எனக் குறிப்பிட்டார். திராவிடம் என்கிற வார்த்தையை பிடிக்காதவர்கள் திமுகவை மதத்திற்கு எதிரி போல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், திமுக மதத்திற்கு எதிரி அல்ல, மதவாதத்திற்குதான் எதிரி எனக் கூறினார். கோயில்கள் சமத்துவம் நிலவும் இடமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வல்லுநர்கள் குழு அமைத்து அவர்களின் கருத்துக்களின் அடைப்படையில் கோயில்களில் திருப்பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிகளையும் அரசு மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.கடந்த ஆண்டு தமிழகத்தில் 8,550 கி.மீக்கு மேல் சுற்றி வந்து தாம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதன் மூலம் 1,03,74,355 பேர் பலனடைந்துள்ளதாகக் கூறினார்.