சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
அப்பகுதியில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கழிவு நீர் அகற்றப்படாமல் உள்ளதாகவும் தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்த கமல்ஹாசன், குழந்தைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பருவமழை பேரிடர் போல் மாறியிருப்பதற்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டிய நாம் தான் காரணம் என குற்றம் சாட்டிய கமல்ஹாசன், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பேரிடர் காலத்தில் அனைவரும் உதவி செய்கிறார்கள் எனவும், எனது பிறந்தநாளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த கட்சியினருக்கு நன்றி. மழை பெய்யும்போதும், அதன்பிறகும் மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் அது நமது கடமையாகும் என்று குறிப்பிட்டார். நாங்கள் வருவதால் தான் தண்ணீர் அகற்றுவதற்காக பம்பு செட்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.








