அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி நாடு தழுவிய அளவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கினார். அந்த நடை பயணம் 100 நாட்களுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களைக் கடந்து இன்று டெல்லி வந்தடைந்தது.. டெல்லியில் ராகுல் காந்தியோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் யாத்திரையில் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், ஆங்கிலம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் உரையாற்றினார். முதலில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய கமல்ஹாசனை தமிழில் பேசுமாறு ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று தமிழில் சிறிது நேரம் பேசிய கமல்ஹாசன் மீண்டும் ஆங்கிலத்தில் தனது உரையை தொடர்ந்தார்.
ராகுல்காந்தியும், தாமும் இந்தியாவின் கொள்ளுப்பேரன்கள் என்று கூறிய கமல்ஹாசன், ராகுல்காந்தி நேரு வழியிலும், தாம் காந்தி வழியிலும் வந்தவர்கள் எனக் கூறினார். தாம் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்கப்போவதாக கூறியபோது, இந்த யாத்திரையில் பங்கேற்பதால் உங்கள் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என சிலர் தம்மிடம் கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். தாம் தமக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், நாட்டுக்காகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறிய கமல்ஹாசன், அதனால்தான் ராகுல்காந்தியின் ”இந்திய ஒற்றுமை” யாத்திரையில் பங்கேற்க முன் வந்ததாகத் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால் எந்தக் கட்சி ஆட்சி நடைபெற்றாலும், அதனை பொருட்படுத்தாமல் தாம் வீதியில் இறங்கி போராடுவேன் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.







