மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சியை பெருந்திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன தொடர்ச்சியாக இன்று அதிகாலை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளியபோது தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பரம்பொருள் திருமால் பூலோகத்தை காக்க பல அவதாரங்களை எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதே தசாவதாரமாகும். அதன்படி மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ணாவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இறுதியாக மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இன்று மாலை ராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் புறப்படும் கள்ளழகர், தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தை அடைகிறார்.
இன்று இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ம் தேதி நாளை அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து அதே கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ம் தேதி காலை கள்ளழகர் தனது இருப்பிடம் போய் சேருகிறார்.
பி.ஜேம்ஸ் லிசா








