“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்!” – மாணிக்கம் தாகூர் கருத்து!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டை ஆதாரமற்ற வாட்ஸ்அப் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பெரிதுபடுத்துவதாகக் கூறினார்.

“வாட்ஸ்அப் செய்தியை வைத்து ஊடக விசாரணையா?”

இதுகுறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “நாம் வாட்ஸ்அப் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாட்ஸ்அப்பில் பொய்யாகப் பரப்பப்படும் செய்திகளை அனைவரும் பகிர்ந்து, அதன் அடிப்படையில் ஊடக விசாரணை நடத்துகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை எம்.எல்.ஏ. அவர். செய்தியாளர்கள் சந்திப்பில்கூட, பாவமாக எனது போனைப் பாருங்கள், சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள் என்று கூறுகிறார்.

அவர் மீது ஊடக விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்துள்ளார். தவறு நடந்திருந்தால் விசாரணை நடத்தலாம். ஆனால், தவறே நடக்காமல் வாட்ஸ்அப் செய்தியை மட்டும் வைத்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதற்கு எதிர்வினையாற்றிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துவிட்ட நிலையில், மீண்டும் மீண்டும் இதைப் பற்றிப் பேசுவது நியாயமல்ல” என்று தெரிவித்தார்.

“உதயநிதி பேசியது அருவருக்கத்தக்கது!”

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து குறித்துப் பேசிய அவர், “தஞ்சாவூரில் 2,000 பேர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது அயோக்கியத்தனமான, அருவருக்கத்தக்க பேச்சு. அதுபோன்று அருள் விக்னேஷ் பேசியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அதற்குச் சாட்சி இருக்கிறதா? இல்லாத ஒன்றையும், இருக்கின்ற ஒன்றையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறானது. அந்த எம்.எல்.ஏ.வே குற்றச்சாட்டை மறுத்துவிட்டார். அவர் தவறு செய்துவிட்டதைப் போல ஊடகங்கள் விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார். அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.