செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் குஞ்சன் அரையிறுதிக்கு முன்னேறி நாட்டுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மெக்சிகோவைச் சேர்ந்த அட்டேனா சோபியா ஜுவாரெஸ் கலேரோவை எதிர்கொண்ட குஞ்சன், 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இதேபோல், மற்றொரு இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான அம்பேகர் மீதேயும் பதக்கத்தை உறுதி செய்துள்ளதால், இப்போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்ட உள்ளது.
தடகளத்தில் வரலாறு படைத்த ஷௌர்யா அம்புரே!
இதற்கு முன்னதாக, மகளிர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஷௌர்யா அம்புரே வெண்கலப் பதக்கம் வென்றார். காம்ப்ளெக்ஸ் இபா மார் டியோப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 13.59 விநாடிகளில் இலக்கைக் கடந்து தனது சிறந்த செயல்திறனைப் பதிவு செய்தார். இதன்மூலம் இளைஞர் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை ஷௌர்யா படைத்தார். இளைஞர் ஒலிம்பிக் வரலாற்றில் தடகளப் பிரிவில் இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கம் இதுவாகும். அவரது பதக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதில் 3 வெள்ளிப் பதக்கங்களும், 5 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.
மல்யுத்தத்தில் முதல் பதக்கம்!
இதேபோல், இளைஞர் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை தானியா பெற்றுத் தந்தார். மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர், தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் மின் ஜாவோவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மின் ஜாவோ, 2025-ம் ஆண்டு நடைபெற்ற 69 கிலோ எடைப்பிரிவுக்கான U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூடோ, பேட்மிண்டன், நீச்சலிலும் பதக்கங்கள்!
மகளிர் 63 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் குஷ்பு ராஜக்பாய் தர்ஜடாவும், பேட்மிண்டன் போட்டியில் தன்வி பத்ரியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். நீச்சல் போட்டிகளில் இந்தியாவுக்கு இரட்டை வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. மகளிர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கங்களை வென்றார். இதன்மூலம் ஒரே இளைஞர் ஒலிம்பிக் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். ஆடவர் 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவில் தீர்த்தங்க் பெகு வெண்கலப் பதக்கம் வென்றார். இளைஞர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும், மகளிர் சாங்வான் கம்பைன்டு வுஷு பிரிவில் ராஜ்குமாரி லான்சென்பி சானு வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.
2018-ம் ஆண்டு சாதனையை முறியடிக்குமா இந்தியா?
இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு 2018-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் பதிவானது. அப்போது இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது டக்காரில் நடைபெற்று வரும் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருவதால், 2018-ம் ஆண்டு படைத்த 13 பதக்கங்கள் என்ற சாதனையை இந்தியா முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




