கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17…

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி,

இவ்வழக்கின் புலன் விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும், சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன் விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளது. இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன் விசாரணையைப் பாதிக்கும் வகையில் அமைவதாகத் தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி, இத்தகைய சூழ்நிலையில், புலன் விசாரணையின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன் விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘1,141 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’

மேலும், அவர்களுடைய வலைத்தள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி, இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரியத் தகவல் கிடைத்தால் அதனைக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகரின் அலைப்பேசி எண்ணுக்கு (9003848126) நேரடியாகப் பகிர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.