கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரூ.2.65 கோடி பறிமுதல்

கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.65 கோடி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.…

கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.65 கோடி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், “கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த 27.04.2016 முதல் 15.03.2021 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11,32,95,755 சொத்து சேர்த்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களில் (தருமபுரி மாவட்டம்-53, சேலம்-1, சென்னை-3, தெலுங்கானா மாநிலம்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இந்த சோதனையில் பணம் ரூ. 2,87,98,650/, தங்க நகைகள் 6.637 கிலோ, சுமார் 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது” என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.