நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்; சங்கர் ஜிவால்

சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை…

சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். திரைப்பட நடிகரான சித்தார்த், தனது ட்விட்டரில் சாய்னாவின் பதிவை குறிப்பிட்டு, அதை இரட்டை அர்த்தத்தில் கேலி செய்யும் விதமாக ட்வீட் செய்தார். அந்த பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையையும், கடும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக, சாய்னா நேவாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சில நாட்களுக்கு முன் நீங்கள் வெளியிட்ட ட்வீட்டுக்கு, தாம் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். தங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட தனது தொனியையும் வார்த்தைகளையும் மாற்றியிருக்கலாம் என்றும், அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் நடிகர் சித்தார்த் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவால் மற்றும் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் குறித்து சர்ச்சை பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதன் அடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

இதனிடையே சித்தார்த் மன்னிப்பு கோரியது வரவேற்கத்தக்கது. அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு பெண் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கக் கூடாது என கூறினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. கொரோனா என்பதால் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என ஆலோசனை நடத்திவருவதாக  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.