வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி டெல்லியில் இடதுசாரி மாணவர் அமைப்பினர், கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் பிரதானமாக போராட்டம் நடத்த பயன்படுத்தப்படும் இடமான ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா , அஜின்கியா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சௌரவ், அசுதோஷ், அஜிங்கியா ஆகிய சிஜேபி நிர்வாகிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களய்ஜி கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல; அதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயலாகும்.
மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி எனப் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு கொடிகளின் கீழ் அணிதிரண்டாலும், அவர்களின் நோக்கம் ஒன்றுதான்: தங்கள் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகளை வலியுறுத்தும் குடிமக்களின் போராட்டங்கள் அனைத்தும் ஒன்றே.
ஜந்தர் மந்தர் இந்திய மக்களுக்குச் சொந்தமானது; அதை நாங்கள் மீண்டும் மீட்டெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




