மின்சார கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

₹35-க்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்தியா முழுமைக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரி குறைந்த விலைக்கே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தினார்.

ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் ரூ.35 – க்கு வாங்க தவெக அரசு முடிவு செய்திருப்பதை, பல்வேறு தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தனது எதிப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மின்பற்றாக்குறையைச் சமாளிக்க யூனிட் ரூ.35-க்குக் கொள்முதல்! ₹1,15,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் செயல்! இது மிகப்பெரிய முறைகேடாகவே கருதப்படும்; இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்! விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற மே மாதம் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து, அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளன.

தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் ஜெனரேட்டர்களை இயக்கி மின்தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்துக் கொண்டாலும், வீடுகளுக்குப் போதிய கூட மின்சாரம் கிடைக்காத சூழலில், மின்விசிறிகளைக் இயக்க முடியாமல், வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வறுத்தெடுக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் மீள முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

கடந்த ஆட்சியின் மீது வேறு வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். மே மாதம் 10-ஆம் தேதி வரையிலும் அனைத்தும் சரியாகத்தானே இருந்தது தமிழகத்தினுடைய தேவைகளை அனல் மின் நிலையங்கள், கூடங்குளம் அணுமின் நிலையம், நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை, சூரிய மின்சக்தி உள்ளிட்ட சுய உற்பத்திகளால் தானே சமாளித்து வர முடிந்தது? கடந்த நான்கைந்து மாத காலமாக மின்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரையிலும் அரசு வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. துவக்கத்தில் மின்வெட்டைப் பற்றிக் கேட்டபோது, “ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய்விட்டன” என்று ஒரு விநோதமான பதிலை அளித்தார்கள்.

தற்போது தினமும் 4,500 மெகாவாட் மின்தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அவற்றை வெளிச்சந்தையில் வாங்க முயற்சிப்பதாகவும், அதுவும் ₹5 முதல் அதிகபட்சம் ₹7-க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு ₹35 என்ற பகாசுர விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாடு ₹13 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இந்நிலையில், ₹5 முதல் ₹7-க்கு வாங்கப்பட வேண்டிய மின்சாரத்தை ஏழு மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவது நியாயமாகத் தெரியவில்லை. இதில் ஏதோ ஒரு மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

கடந்த கால ஆட்சியைப் பற்றி மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இந்த ஆட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் இவ்வளவு மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது? குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியது ஏன்? இந்த அரசு உண்மைத் தன்மையை வெளியிட வேண்டும். 1,500 மெகாவாட் மின்சாரத்தை தினமும் இவர்கள் குறிப்பிடக்கூடிய ₹35 விலையில் கொள்முதல் செய்ய இந்த அரசு முயலுமேயானால், அடுத்த 20 நாட்களிலேயே ₹1,15,000 கோடி ரூபாய் அளவிற்கு நட்டஈடு ஏற்பட்டுவிடும்.

எனவே, இவ்வரசு 1,500 மெகாவாட் மின்சாரத்தை ₹35-க்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, வெளிப்படையாக இந்தியா முழுமைக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரி குறைந்த விலைக்கே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.