சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் வழக்கமான கூட்டம் மாலை வேளையில் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ மாணவிகளும், வேலைக்கு சென்று வந்த ஆண்களும், பெண்களும் தங்கள் வீட்டுக்கு செல்வதற்க்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த நேரத்தில், திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை தூக்கியபடி கூட்டத்திற்கு மத்தியில் நடந்து சென்றார்.
அப்போது அவர்கள் சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணை கொஞ்சிய படியும் தூக்கி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அதை ஒருவர் வீடியோ பதிவு செய்வதை கண்டதும், சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என கருதினர். ஆனால் அவர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்தவில்லை, சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்சில் பதிவிடுவதற்காக தான் வீடியோ எடுக்கிறார்கள் என்பது பிறகு தெரிய வந்ததாம்.
அதை தொடர்ந்து விசாரித்ததில் இளம்பெண்ணும், இளைஞரும் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், சமூக வலைதளங்களில் வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது போன்ற அதிக நபர்கள் கூடும் இடங்களில் இப்படி ஒரு செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







