திமுகவினர் மீதான ஊழல் புகார் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“என் மண்..என் மக்கள்..” நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
“இந்த யாத்திரை மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு. இதன் மூலம் நல்ல மாற்றம் வரும் என்பதே பாஜகவின் நோக்கம். ஓபிஎஸ் உள்ளிட்டோர் விரக்தியாகவில்லை. அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர். பல பொறுப்புகளில் இருந்து மக்கள் பணி செய்தவர். எங்களை பொறுத்தவரை யாரையும் ஒதுக்கவில்லை. அதிமுகவோடு பாஜக அதிகாரப்பூர்வ கூட்டணியில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பாஜக தான். ஆட்சி அதிகாரத்தில்
உள்ளவர்களின் தவறை சுட்டிக் காட்டுவது பாஜக தான். வேறு பட்டியல் வெளியிட வேண்டும் என சொல்பவர்கள் அந்த பட்டியலை வெளியிடட்டும். எங்கள் தோள் மீது ஏறி சவாரி செய்யக்கூடாது. ஓவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம் உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டில் கமா உள்ளதா, ஃபுல் ஸ்டாப் உள்ளதா என்று விவாதம் செய்வதை தவிர்த்து குற்றச்சாட்டுகளை பார்க்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். அமலாக்கத்துறை, சி பி ஐ-ஐ பொறுத்தவரை தன்னாட்சியாக செயல்பட கூடிய அமைப்புகள். அவர்கள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எந்த வழக்கையும் மூட முடியாது எல்லா வழக்கையும் நீதிமன்றம் கண்கொத்தி பாம்பாக பார்த்து வருகிறது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை நடுநிலையாக உள்ளது. ஆனால் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொண்டவர்கள் குறை சொல்கிறார்கள்.கொடநாடு வழக்கு மட்டும் இன்றி எந்த ஒரு சென்சிடிவ் வழக்காக இருந்தாலும்
குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்க
முடியாத வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும்” என அண்ணமாலை தெரிவித்தார்.






