அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் அதிக முதலீடுகளை பெற்று வட்டியை முறையாக கொடுக்காமல் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியில் தலைமை இடமாகக் கொண்டு இயக்கி வருகிறது ஏ ஆர் டி
நகைக்கடை. இந்த நகை கடையில் பணிபுரிந்து வரக்கூடிய ஆசிக் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் என் எஸ் சி போஸ் சாலையில் இருந்து மூன்று கிலோ தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஓலா காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அண்ணா நகர் ரவுண்டானா அருகே தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வெள்ளை நிற சொகுசு காரில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மூவரையும் கடத்தியதாகவும் அந்த பெண் தோழியை வானவில்லிலும் மற்ற இருவரை தாக்கி நகைகளை பறித்துக் கொண்டு நொளம்பூர் பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த நகைக்கடையின் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகை கடையின் பணியாளர் ஆசிப் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்
நொளம்பூரில் செயல்பட்டு வரக்கூடிய ஏ ஆர் டி நகைக்கடையில் ஒரு லட்சம் முதலீடு
செய்தால் வாரம் 3 ஆயிரம் விகிதம் 4 வாரத்திற்கு 12 ஆயிரம் வட்டியாக தருவதாக
கூறியதாகவும் கடந்த ஒரு வார காலமாக பணத்தை முறையாக முதலீட்டாளர்களுக்கு
வழங்காமல் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைக்கடையில் முதலீடு செய்த ஒரு நபர் மூலமாக 30க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஒரு வாரம் கடந்தும் முதலீட்டுக்கான வட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த காரணத்தினால் அந்த நபர் நகைகளை கொண்டு சென்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
மேலும் முதலீட்டுத் தொகையை திருப்பி தராத காரணத்தினால் நகை கடை ஊழியர்கள் கொண்டு சென்ற ஒரு கோடி மதிப்புடைய தங்க நகைகளை முதலீட்டாளர்கள் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மேலாளர் ஆசிப் மற்றும் அந்தோனி ராஜ், பவானி ஆகியோர் திட்டமிட்டு, கடையில் முதலீடு செய்து இருந்த சுபாஷ் என்பவனோடு சேர்ந்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலாளர் ஆசிப், அந்தோணி, பவானி, சுபாஷ் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் மோசடி மீது நொளம்பூர் காவல்நிலையத்தில் 8 புகார்கள் வந்துள்ளதாகவும், பொருளாதாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் சென்று புகார் அளிக்க வற்புறுத்தி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.







