இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இந்திய சுதந்திரத்துக்காக போராடினார்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதல் இந்திய பிரதமராக பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டார் நேரு. சுதந்திரம் அடைந்தவுடன் நிலவிய பொருளாதார சிக்கல்கள், நிர்வாக குறைபாடுகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தியவர் நேரு. பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, 1964 ஆம் ஆண்டு மே 27-ம் தேதி காலமானார்.
ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “பண்டித ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியம் ஒரு கலங்கரை விளக்கைப் போல உயர்ந்து நிற்கிறது. அவர் தனது வாழ்க்கையை சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் நவீனத்துவத்திற்காக அர்ப்பணித்தார்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.







