மதுரையில் ’லியோ’ இசை வெளியீட்டு விழா?? அரசியல் திட்டம் தீட்டுகிறாரா நடிகர் விஜய்??

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு…

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினரின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவதாக இதுவரை தெரிவிக்காத நிலையில் தொடர்ந்து அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டு வருகிறார்.

அம்பேத்கர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட வேண்டும், தொகுதி வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை அதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது விஜய் சந்தித்து ஆலோசனைகளை வழங்குவதும் அரசியல் ரீதியாக தகவல் கேட்பதும் இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் மாவட்டங்களில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். விஜய் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், வேலாயுதம் படத்திற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து தென் மாவட்டத்தில் குறிப்பாக மதுரையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாஜக அரசு – சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம்!!

இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் பேசும் அரசியலும் அவர் சொல்லும் குட்டி கதைகளும் பேசுபொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தென் மாவட்டங்களில் தனது அரசியல் வருகையை பதிவு செய்யவே நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவற்றை எல்லாம் தாண்டி லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச போகும் அரசியல் என்ன? அவர் சொல்லும் குட்டி கதை எதை பற்றியது? என ரசிகர்கள் இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர் என்பதையும் மறுக்க முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.