கோவையில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் வழிபாடு!

கோவையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில்  நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு…

கோவையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில்  நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கிருஷ்ண பக்தர்களால் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை இஸ்கான் அமைப்பு சார்பில் 31 ஆவது ஆண்டு ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டி திடலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகந்நாதர், சுபத்ரா தேவி, பலதேவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தேரை இஸ்கான் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.தேருக்கு முன்பாக பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பஜனை பாடியபடி சென்றனர்.
மேலும் பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி சென்றனர். தேர் தேர்முட்டியில் புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வலம் வந்து, மீண்டும் தேர்முட்டி திடலை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீசார்,  போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டதோடு, நகரில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.