திரைப்படத்தை சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி – நடிகர் பார்த்திபன்

பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ்…

பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இத்திரைப்படம் வெளியானது. அதிகாலையிலேயே மேளதாளங்களுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கங்களில் திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தைக் குறித்த நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பலர் படம் குறித்த விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கு வளாகத்தில் ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், பறையிசை முழங்கவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி ஃபோரம் மாலில் உள்ள திரையரங்கில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயராம், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். அதேபோல தஞ்சையில் உள்ள ஜிவி ஸ்டூடியோ திரையரங்கில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ரசிகர்களுடன் அமர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கண்டு களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தைச் சோழ தேசத்தில் பார்த்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.