முதலமைச்சர் மெத்தனமாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் வரும் 13, 14, 15-ஆம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து, நாமக்கல் பொய்யேரி கரையில் பாஜக சார்பில் இல்லங்கள் தோறும் தேசியக் கொடியைப் பொதுமக்களுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 75-ஆம் ஆண்டு சுதந்திர பெருவிழாவையொட்டி வீடுகள் தோறும் பொதுமக்கள் ஆகஸ்ட் 13,14, 15 ஆகிய நாள்களில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர விழாவைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், வருகின்ற 100-ஆம் ஆண்டு சுதந்திர தினத்திலும் பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டிற்குப் பிரதமராகத் திகழ்வார் எனக் கூறினார்.
சுதந்திர தினம் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டியது எனத் தெரிவித்த அவர், வீடுகளில் தேசிய கொடியேற்றும் நிகழ்வு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது எனக் கூறினார். மேலும், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் கூறியுள்ளதை வரவேற்கிறோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மாநிலங்களோடும் இணக்கமாக இருந்து பொதுமக்களின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் 8 கோடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை அவர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்; தங்கம் யாருக்கு? இன்று முக்கிய பலப்பரீட்சை!’
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதே பாஜகவின் நீண்டகால குற்றச்சாட்டாக உள்ளது எனத் தெரிவித்த அவர், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மத்திய அரசு போக்சோ சட்டத்தை இயற்றி கடுமையாக நடவடிக்கை எடுப்பதால் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. அதனை மாநில அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கை முழுமையாக கடைப்பிடித்து உத்திர விட வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெத்தனமாக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கிலிருந்து வருவது என்பது உண்மைதான் எனத் தெரிவித்த அவர், விலைவாசி, ஜிஎஸ்டி, காய்கறி விலை உயர்வு குறித்து கனிமொழி எம்.பி பேசியதற்கு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் அளிக்கும்போது திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறார்கள். முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இதேபோல மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிநடப்பு செய்தார் எனக் கூறினார்.








