நெய்வேலி NLC நிறுவன தலைமை அலுவலகத்துக்குப் பூட்டு போட வந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு
பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி நிறுவன தலைமை அலுவலகத்திற்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் துண்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனால், இன்று காலை முதல் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் என்எல்சி நிறுவனத்தின் செக்யூரிட்டி பிரிவினர், 50க்கும் மேற்பட்ட நெய்வேலி காவல் துறையினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தங்கம் சிகாமணி என்பவர் உட்பட மொத்தம் ஏழு பேர் அப்பகுதியில் மரத்தின் ஓரம் நின்றிருந்தனர். அவர்களை விசாரித்தபோது, அவர்கள்தான் என்எல்சி நிறுவனத்திற்குப் பூட்டு போட வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டுப்போடப் போவதாக துண்டறிக்கை வெளியிட்டதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபொழுது ஏழு பேர் மட்டும் போராட்டம் நடத்த வந்து கைதாகி இருப்பது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா








