மத்திய பிரதேசத்தில் வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு ஆலோசனை நடத்திவருகிறது
அரசியல் அமைப்பு சட்டத்தின் 243ம் பிரிவு பெண்களுக்கான இடஓதுக்கீடு பற்றி பேசுகிறது. நாட்டிலுள்ள 20 மாநிலங்களில் உள்ளாட்சிப் பதவியிடங்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும், பெரும்பாலான இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே பணிகளில் ஈடுபடுகின்றனர். பெண்கள் வெறும் கையெழுத்து போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பெண்கள் சுயமாக செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுக்கின்றன.
இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக ஆண்களே பதவிப் பிரமாணம் எடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சிப் பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
மத்திய பிரதேசத்தின் தார், தமோ, சகார் மற்றும் பண்ணா ஆகிய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி சாகரில் ஜெய்சிங் நகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் வெற்றிபெற்ற 10 பெண்களில் 3 பெண்கள் மட்டுமே பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். மற்றவர்களுக்கு ஆண்களே பதவியேற்க அனுமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவை மீண்டும் நிகழாமல் இருக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, விதிமுறை மீறலும் கூட. சரியான பிரதிநிதிகள் பதவி பிரமாணம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மத்திய பிரதேச ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் தெரிவித்தார்.







