விண்ணில் பாயும் இஸ்ரோவின் GSLV ராக்கெட்: ஏவப்படும் NVS-03 செயற்கைக்கோள்!

ஜிபிஎஸ் சேவையில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சியாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரத்துடன் GSLV ராக்கெட் இன்று அக்.30 விண்ணில் பாய்கிறது.

இந்தியாவின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரத்தை (Atomic Clock) சுமந்துகொண்டு இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள் இன்று இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் (SDSC SHAR) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று இரவு 11.51 மணிக்கு GSLV-F18 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் புவிசார் ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகலமான GSLV ராக்கெட்டின் 20-வது பயணமாக இது அமைய உள்ளது. மேலும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணு கடிகாரத்தை விண்ணில் நிலைநிறுத்தும் முக்கியமான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

NVS-03 செயற்கைக்கோளின் சிறப்பு என்ன?

NVS-03 என்பது இந்தியாவின் அடுத்த தலைமுறை வழிகாட்டுதல் செயற்கைக்கோள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இதற்கு முன்பு ஏவப்பட்ட NVS-01 மற்றும் NVS-02 செயற்கைக்கோள்களிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரங்கள் இடம்பெற்றிருந்தன. NVS-03 செயற்கைக்கோளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபிடியம் அணு கடிகாரத்துடன் (Rubidium Atomic Clock), வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பிற அணு கடிகாரங்களும் இடம்பெறுகின்றன.

இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் நிலப்பரப்பு முழுவதையும், நாட்டின் எல்லையில் இருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவு வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் L5 மற்றும் S சிக்னல்களுடன், பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு உதவும் L1 சிக்னல் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் சொந்த GPS சேவை – NavIC

GPS என்றாலே அமெரிக்காவின் தொழில்நுட்பம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவும் தனக்கென பிரத்யேகமான செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கியுள்ளது. அதுதான் NavIC (Navigation with Indian Constellation). இதன் பழைய பெயர் IRNSS (Indian Regional Navigation Satellite System). 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது, இந்தியாவுக்கு அந்தப் பகுதியில் அமெரிக்காவின் GPS தகவல்கள் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்புகளை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தியா உணர்ந்தது.

இதையடுத்து, சொந்தமாக செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியது. இதன் ஒரு பகுதியாக, 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை முதல் தலைமுறையைச் சேர்ந்த 7 IRNSS செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்தியாவிலும், நாட்டின் எல்லைக்கு அப்பால் சுமார் 1,500 கி.மீ. வரையிலான பிராந்தியத்திலும் துல்லியமான இருப்பிடத் தகவல்களை வழங்குவதே NavIC திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது பழைய IRNSS செயற்கைக்கோள்களுக்கு மாற்றாகவும், அதன் சேவைகளை விரிவுபடுத்தவும் புதிய தலைமுறை NVS செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் NVS-03 முக்கியப் பங்கு வகிக்கிறது.

விண்வெளியில் அணு கடிகாரம் எதற்கு? அதன் செயல்பாடு என்ன?

இந்தத் திட்டத்தில் அணு கடிகாரம் இடம்பெறுவது ஏன் என்பது பலருக்கும் எழும் கேள்வி. அணு கடிகாரம் என்பது உலகிலேயே மிகத் துல்லியமாக நேரத்தைக் கணக்கிடும் கருவிகளில் ஒன்றாகும். சாதாரண கடிகாரங்கள் பெண்டுலம் அல்லது குவார்ட்ஸ் படிகங்களின் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகின்றன. ஆனால், அணு கடிகாரம் என்பது அணுக்களின் இயற்கையான அதிர்வு அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகிறது. பொதுவாக சீசியம்-133 போன்ற அணுக்கள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அணுக்களின் அதிர்வுகள் மிகவும் நிலையானவை என்பதால், மிகத் துல்லியமான நேரத்தைக் கணக்கிட முடியும்.

செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பில் இந்தத் துல்லியம் மிகவும் அவசியம். ஏனெனில், பூமியில் உள்ள ஒருவரின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய செயற்கைக்கோள்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் பயனரின் சாதனத்தை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது என்பது கணக்கிடப்படுகிறது. ஒளி மற்றும் ரேடியோ அலைகள் நொடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றன. இதில் ஒரு பில்லியனில் ஒரு பங்கு நொடி (Nanosecond) அளவுக்குக் கூட நேரக் கணக்கீட்டில் பிழை ஏற்பட்டால், பூமியில் இருப்பிடத்தைக் கணக்கிடுவதில் சுமார் 300 மீட்டர் வரை பிழை ஏற்படலாம். எனவே, பல்வேறு செயற்கைக்கோள்களும் ஒரே நேரக் கணக்கீட்டில் ஒத்திசைவாகச் செயல்பட அணு கடிகாரங்கள் மிகவும் அவசியமாகின்றன.

வெளிநாட்டு அணு கடிகாரங்களைச் சார்ந்திருப்பது ஏன் குறைக்கப்படுகிறது?

NavIC திட்டத்தின் முதல் தலைமுறை செயற்கைக்கோள்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூபிடியம் அணு கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 2016-17 காலகட்டத்தில் தொடங்கி அவற்றில் சில செயலிழந்ததால், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் சேவைகளின் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து, வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவிலேயே அணு கடிகாரங்களை உருவாக்க இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு அணு கடிகாரங்களே தற்போது NVS செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மட்டுமின்றி, நாட்டின் முக்கியமான நேரக் கணக்கீட்டுத் தொழில்நுட்பத்திலும் இந்தியா தற்சார்பு அடையும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

‘ஒரே நாடு, ஒரே நேரம்’ திட்டம் – ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

இந்தியாவின் உள்நாட்டு அணு கடிகாரத் தயாரிப்பு முயற்சி, மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே நேரம்’ (One Nation, One Time) தொலைநோக்குத் திட்டத்துடனும் தொடர்புடையது. நாடு முழுவதும் இந்திய நேரமான IST (Indian Standard Time) ஒரே பொதுவான, நம்பகமான நேரக் கணக்கீட்டு முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி மத்திய அரசு சட்ட அளவியல் (இந்திய நேரம்) விதிகள் 2026-ஐ அறிவித்துள்ளது. அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்குப் பிறகு இந்த விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன.

தொலைத்தொடர்பு, வங்கிப் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள், மின்சாரக் கட்டமைப்புகள், போக்குவரத்து, தரவு மையங்கள் மற்றும் அரசு தகவல் அமைப்புகள் எனப் பல்வேறு துறைகளில் துல்லியமான நேரக் கணக்கீடு மிகவும் அவசியமாக உள்ளது. இத்தகைய துறைகளில் ஒரே சீரான நேரத்தையும், துல்லியமான நேரப் பதிவுகளையும் உறுதி செய்வதற்கு இந்த முயற்சி உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்வெளித் தொழில்நுட்பம் முதல் நாட்டின் அன்றாடப் பயன்பாடுகள் வரை, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, சொந்தத் தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடையும் இந்தியாவின் முயற்சியில் NVS-03 செயற்கைக்கோள் ஏவுதல் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.