“மாற்றுத்திறனாளிகளுக்கு AI உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி!” – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு AI உபகரணங்கள் வாங்கிட மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000 நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அர்சு வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது, “மாற்றுத்திறனாளிகள் தங்களின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கும், வாழ்வாதாரத்திற்கும் உதவும் வகையில் அரசால் ஏற்கனவே 57 வகையான உதவி உபகரணங்கள் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், “தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்களான விளையாட்டு செயற்கை உறுப்பு (sports prosthetic), மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் (upper limb myoelectric prosthesis), பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் காக்ளியர் இம்பிளான்ட் பேட்டரி (cochlear implant battery) போன்ற பிற உயர்வகை உதவி உபகரணங்களை வாங்குவதற்காக அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்” என 2026-2027 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் போதான உரையில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவி உபகரணங்களைத் தவிர்த்து, தங்களது தேவையின் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மேம்பட்ட புதிய உபகரணங்களை மாற்றுத்திறனாளி பயனாளர்களே நேரடியாகக் கொள்முதல் செய்யும் நேர்வில், அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30,000/-, இதில் எது குறைவோ அத்தொகையை உதவித்தொகையாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சரால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை, மாற்றுத்திறனாளிகளை மேலும் தன்னிச்சையாகச் செயல்பட வழிவகுப்பதோடு, அரசின் குறிக்கோளான “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதனை அடைய மேலும் ஒரு முன்னெடுப்பாக அமையும்” என்று ஆதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.