இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்கள்! – மத்திய அரசு ஒப்புதல்

எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் பிரத்யேக வடிவமைப்பு, நீர்மூழ்கிக் கப்பல், வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட 8 அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்களை கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய கடற்படையின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.40,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 8 அடுத்த தலைமுறை அதிநவீன போர்க்கப்பல்களை (Next Generation Corvettes) கட்டமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் உயர்மட்ட அளவில் ஒப்புதல் பெற்ற மிகப்பெரிய பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

இந்த 8 போர்க்கப்பல்களும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் (GRSE) மற்றும் கோவா ஷிப் யார்டு லிமிடெட் (GSL) ஆகிய இரண்டு பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரிகளின் ரேடாரில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பம்

புதிய தலைமுறை கார்வெட் ரக போர்க்கப்பல்கள், அளவில் சிறியதாக இருந்தாலும் அதிவேகத்திலும் ஆயுத வலிமையிலும் சிறந்து விளங்கக்கூடியவை. கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளுக்காக இவை பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரிகேட் மற்றும் டெஸ்ட்ராயர் ரக கப்பல்களைவிட அளவில் சிறியவை என்றாலும், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட உள்ள 8 புதிய போர்க்கப்பல்களும் தலா 2,000 டன் எடை கொண்டதாகவும், மணிக்கு சுமார் 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியதாகவும் இருக்கும். இதன் முக்கிய சிறப்பம்சம், எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் எளிதில் சிக்காத வகையில் உருவாக்கப்படும் ஸ்டெல்த் (Stealth) தொழில்நுட்பமாகும். இந்திய கடற்படையே உள்நாட்டில் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள இந்தக் கப்பல்கள், நவீன கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட உள்ளன.

மும்முனைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் திறன்

இந்த போர்க்கப்பல்கள் பல்வேறு கடல்சார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பன்முகத் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. குறிப்பாக, கடல்வழியாக வரும் எதிரி கப்பல்களைத் தாக்கும் திறன், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து எதிர்த்துத் தாக்கும் திறன், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் என பல்வேறு பாதுகாப்புத் திறன்களைக் கொண்டிருக்கும். மேலும், அதிநவீன ஆயுதங்கள், சென்சார்கள், அதிக வேகம் மற்றும் துரிதமாகச் செயல்படும் திறன் ஆகியவை இந்திய கடற்படையின் போர் நடவடிக்கைகளுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு

இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், 70 சதவீதத்துக்கும் அதிகமான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன என்பதாகும். மத்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு இந்தத் திட்டம் மேலும் ஊக்கமளிக்கும். மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ‘சாகர்’ (SAGAR – Security and Growth for All in the Region) தொலைநோக்குத் திட்டத்திற்கும் இது வலுசேர்க்கும்.

ரூ.40,000 கோடிக்கும் அதிகமான இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கும் நீண்டகாலப் பணிகள் கிடைப்பதுடன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2030-ல் முதல் போர்க்கப்பல் ஒப்படைப்பு

இந்த 8 போர்க்கப்பல்களில் முதலாவது கப்பலின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஓராண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போர்க்கப்பலை 2030-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.