உக்ரைனில் இருந்து 1038 தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக நடந்துவரும் போரால் அந்நாட்டில் இருக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இதனால் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களை அழைத்து வரும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 15,920 பேர் 76 விமானங்கள் மூலமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதன் மூலமாக 1178 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அதில் 1038 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உக்ரைனில் இருந்து நேற்று டெல்லி திரும்பிய 181 தமிழ்நாட்டு மாணவர்கள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். தாயகம் திரும்பிய மாணவர்களை, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் இருந்து இதுவரை 1038 மாணவர்கள் தமிழ்நாடு வந்திருப்பதாகவும், மேலும் 140 பேர் வரவிருப்பதாகவும் தெரிவித்தார். மாணவர்களை பத்திரமாக அவர்களது பெற்றோர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அப்போது பேசினார். சென்னை வந்தடைந்த மாணவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை அரசே ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.