அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தவெக ஆட்சியில் நடைபெறும் கொலைகளை பட்டியலிட்டால் இது தொன்றுதொட்டு நடைபெறும் நிகழ்வு என ஏளனம் செய்வதா ? மாற்றத்தின் நாயகர்கள் கொண்டு வந்த மாற்றம் “தங்களது இயலாமையை மறைக்க மைக் முன்பு சப்பைக்கட்டு கட்டுவது மட்டுமே”.
தீபாவளி தினத்தன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்தும், கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அமைச்சர்ராஜ்மோகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தீபாவளி பண்டிகையன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது புதியதல்ல என்று பதிலளித்திருப்தன் மூலம் தவெக ஆட்சியில் படுகொலைச் சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விட்டதை ஒப்புக்கொள்கிறாரா?
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், படுகொலைச் சம்பவங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் என அரசை நோக்கி எழும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசி சப்பைக்கட்டு கட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கும் தவெக அரசு, தேர்தலுக்கு முன்பாக மூச்சுக்கு முந்நூறு முறை கூறிய ”மாற்றம்” இது தானா? என்று மக்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாடு “FUN AND ENTERTAINMENT” என்று சொன்னதோடு, காவலர்கள் உட்பட சாமானியர் வரை கொல்லப்படுவது தொன்று தொட்டு நடைபெறும் நிகழ்வு என அனைத்து குற்றங்களையும் “Normalize” செய்ய முயற்சிக்கும் தவெக அரசு, தேர்தல் நேரத்தில் “மாற்றம் மாற்றம்” என கொக்கரித்தது இதை தானா? என்ற கேள்வியையே கேட்கத் தோன்றுகிறது.
குற்றச்செயல்களையும், தமிழகத்தையும் பிரிக்கவே முடியாது என்ற நிலையை உருவாகியுள்ள தவெக அரசு, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் காவல்துறையின் செயல்பாடுகளை முடக்கி கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, குற்றச்சம்பவங்கள் நடைபெறும் முன்பாகவே அதனை கண்டறிந்து தடுத்துவந்த காவல்துறையை, முதலமைச்சரையும், தவெக அரசையும் விமர்சிப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் ஏவல் துறையாக மாற்றியமைத்து, அதன் செயல்பாடுகளை நீதிமன்றங்களே அவ்வப்போது குட்டுவைத்து வருவது தவெக அரசின் நிதானமற்ற கொடுங்கோல் ஆட்சியை மக்களிடையே அம்பலப்படுத்துகிறது.
எனவே, எந்தக் காலகட்டத்திலும் ஆளும் அரசின் அலட்சியங்களையும், நிர்வாக சீர்கேட்டையும், சரிசெய்யப்பட வேண்டும் என எடுத்துரைப்பது எதிர்க்கட்சியினரின் கடமை என்பதை இனியாவது உணர்வதோடு, மாற்றத்தை தருகிறோம் என பாசாங்கு காட்டி ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மற்றவர்களின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து ஓடாமல், படுகுழியில் தள்ளப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கி, குற்றச்சம்பவங்களை தடுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.




