7 நாடுகளுக்கு 25% வரை வரி!
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) சமீபத்திய திட்டத்தின்படி, இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. முக்கிய வர்த்தக நாடுகளின் தொழில்துறை உற்பத்தித் திறன், சந்தைத் தேவையை விட அதிகமாக இருப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
16 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்த 8 மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த முன்மொழிவு வெளியாகியுள்ளது. சந்தைத் தேவையை விட அதிகமான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது வாஷிங்டன் குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவுக்கு 40% வரை வரி!
மொத்தம் 14 வர்த்தகக் கூட்டாளி நாடுகளை உள்ளடக்கிய இந்த வரி விதிப்புத் திட்டத்தில், சீனாவுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு 35 சதவீதம் வரையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள், ஜப்பான், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 20 சதவீதம் வரை வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விசாரணைக்குப் பின்னணி என்ன?
சந்தைத் தேவையை விட அதிகமான உற்பத்தித் திறனை நாடுகள் உருவாக்கி வருவதாக அமெரிக்கா கூறும் ‘கட்டமைப்பு ரீதியான உபரி உற்பத்தித் திறன்’ (Structural Excess Capacity) என்பதே இந்த விசாரணையின் முக்கியக் கருப்பொருளாகும். இதற்கு தொழில்துறை கொள்கைகள், அரசின் மானியங்கள் மற்றும் சந்தைப் பொருளாதாரம் அல்லாத நாடுகளைச் சேர்ந்த உதிரிபாகங்களை உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிகள் ஆகியவை காரணமாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விசாரணையில் இந்தியாவுடன் ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

உடனடியாக அமலுக்கு வருமா?
இந்தியாவுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்ற முன்மொழிவு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடாது. இதற்காகப் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கருத்துக் கேட்பு நடைமுறைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகே வரி விதிப்பு அமல்படுத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களின் வரம்பிற்குள் இந்தப் புதிய வரிகள் இருக்கும் என்றும் அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரி விதிப்பு மற்றும் சந்தை அணுகல் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அமெரிக்கா குறிப்பிட்டுள்ள வர்த்தகக் கட்டமைப்பின் கீழ் இந்தியாவுடன் இதுவரை இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




