தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம்!
“தமிழகத்தின் நீராதாரத்தைப் பாதுகாக்கவும், வெள்ள உபரி நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுத்து, வறட்சியான பகுதிகளுக்கு பயன்படுத்தவும் முன்மொழியப்பட்ட காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம், சரபங்கா திட்டம், புது கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
காவிரி, கச்சத்தீவு, இலங்கை தமிழர் படுகொலை, முல்லைப் பெரியாறு, மேகதாது அணை என தமிழகத்திற்கு வெறும் துரோகங்களை மட்டுமே பரிசளித்து வந்த காங்கிரஸுக்கு, தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் இன்னும் அடங்கவில்லை போல. அதனால் தான், தமிழகத்தின் நீராதாரத்தை நிறுத்தி, குடிநீருக்கே கையேந்தும் அவல நிலைக்கு தமிழக மக்களை தள்ளப் பார்க்கிறார்கள்!
முதல்வர் விஜய்க்கு கேள்வி!
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உரிமை நீரைப் பறிக்கும் மேகதாது அணைத் திட்டத்தைப் போலல்லாமல், வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரைக் கொண்டு தமிழக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான நதிநீர்த் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வருவதால், கர்நாடக காங்கிரஸுக்கு என்ன பிரச்சினை? காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பலமுறை உத்தரவிட்டாலும் கூட, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை சரியான நேரத்திற்கு திறந்து விடாமல் குறுவை பயிர்களையும், சம்பா விளைச்சலையும் கெடுத்து, விவசாயிகளை நிலைகுலைய வைத்த கர்நாடக காங்கிரஸ் அரசு, தற்போது தமிழக அரசின் கொள்கை முடிவுகளிலும் தலையிட ஆரம்பித்துவிட்டதா? கூட்டணி பாசம் கருதி முதல்வர் விஜய் அதை வேடிக்கை பார்க்கிறாரா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




